t> கல்விச்சுடர் சிறுகதை - சுண்ணக்கட்டித் துகள் படிந்த விரல்கள் - அஜந்தா தேவி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 July 2025

சிறுகதை - சுண்ணக்கட்டித் துகள் படிந்த விரல்கள் - அஜந்தா தேவி




முகிலா....
என் அலறல் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் முகிலா.

என்ன இது ? சற்றே உரத்த குரலில் கோபமாக கேட்டேன்.

சாரி மிஸ் என்றாள் தலை குனிந்தவாறே.

என்ன சாரி? மார்க்கும் எடுப்பதில்லை.
வகுப்பில் தூக்கம் வேறு.
நாளை அப்பாவுடன் வந்தால் வகுப்பிற்கு வா. இல்லையென்றால் வராதே.

கண்ணைக் கசக்கி நின்ற அவளை நிர்தாட்சணியமாய் கடந்து சென்றேன்.

காலையிலிருந்து ஆந்தை போல் அலறி கணக்கு சொல்லிக் கொடுத்ததுதான் மிச்சம்.

முகிலா மண்டைக்குள் ஏறியதாகவே தெரியவில்லை.தலை வலித்தது.நல்லவேளை , நாளை விடுமுறை !


இரண்டு நாட்கள் விடுமுறை போதவே இல்லை.
மீண்டும் திங்கட்கிழமை.

முதல் பாடவேளை முடிந்தபின்
ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்றேன்.

கணக்கு வகுப்பு முடிந்ததால் கை விரல்களை சுண்ணக்கட்டித் தூள் அப்பியிருந்தது.

அழுத்தித் தேய்த்துக் கழுவினேன்.

அச் அச் என இரண்டு தும்மல் போட்டுக் கொண்டே தேர்வுத் தாள்களைத் திருத்த ஆரம்பித்தேன்.

முகிலா வகுத்தல் கணக்குகளை கூட்டல் கணக்காக மாற்றியிருந்தாள்.

தலைவலி அதிகமாகியது.

ச்சே ...கோபமாக வந்தது.

சட்டென தேர்வுத் தாளை மூடி வைத்து நிமிர்ந்தேன்.

"மே ஐ கம் இன் மிஸ்?"

உள்ளே வா என்றேன்.

முகிலா அவள் தந்தையுடன் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள்.

உங்கள் மகள் சரியாக வகுப்பில் பாடம் கவனிப்பதே இல்லை.மதிப்பெண் மிகவும் குறைவாகவே எடுக்கிறாள்.
பாஸ் பண்ணுவது மிகவும் கடினம்.

வேஸ்ட் !

அடுத்த வருடம் பத்தாவது வேறு.
நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே பத்தாவது போக முடியும்

இல்லையென்றால் மறுபடி ஒன்பதாம் வகுப்பு தான். முகிலா தலை கவிழ்ந்திருந்தாள்.

அவளது தந்தை மெல்லிய குரலில் எங்காவது டியூஷன் அனுப்பியாவது
படிக்க வைத்து விடுகிறேன் அம்மா என்றார்.

நம்பிக்கையற்ற பார்வையுடன் பதில் சொல்லாமல் நகர்ந்தேன்.

நாட்கள் உருண்டோடின. 

முகிலா ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து இருந்தாள். 

அவள் அப்பாவைக் பார்க்க பாவமாக இருந்தது. 

அடுத்த வருடம் அவளது தோழிகள்
அனைவரும் பத்தாம் வகுப்பில். 

முகிலா அதே வகுப்பில்.கண்கள் சிவந்திருந்தது.அழுதிருப்பாள் போலும். 

எத்தனை முறை கற்றுக் கொடுத்தாலும் கணக்கு அவளுக்கு பிணக்காகவே இருந்தது.எரிச்சலாக வந்தது.


மேடம்  உங்களுடைய புது  டைம் டேபிள். 

அவசரமாக வாங்கிப் பார்த்தேன்.
நல்லவேளை இந்த முறை முகிலாவிற்கு
நான் கணக்கு எடுக்கவில்லை. 

அப்பாடா !

வருடங்கள் உருண்டோடின. 

வழக்கம்போல சாக்பீஸ் எடுத்துக் கொண்டு வகுப்பிற்குள் நுழைந்தேன். 

இன்று ட்ரிக்னாமெட்ரி எப்படியாவது முடித்துவிட வேண்டும்.
பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே
அடிவயிற்றில் ஏதோ வலி.மயக்கம் வருவது போல் இருந்தது. 

தடுமாறி இருக்கையில் அமர்ந்து சாய்ந்தேன்.விரல்களில் பிடித்திருந்தத சாக்பீஸ் உருண்டோடியது. 

மிஸ்,மிஸ் என்ற சத்தங்கள்.
நினைவிழந்தேன் 

ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. 

ஏதோ மருத்துவமனையில் இருந்தேன். 

என் கணவரும் மலர்விழி டீச்சரும் நின்றிருந்தார்கள். 

மருத்துவர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். 

இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது.
இவர்களுக்கு நீரிழிவு வியாதி உள்ளதா? 

இல்லை டாக்டர் என்றார் என் கணவர். 

நாளைக்கு காலை சுகர் டெஸ்ட் எடுத்து வாருங்கள் என்றார். 

விபரங்களை விசாரித்து,
"காலையில் சாப்பிடாமல் வர சொன்னார்கள் "என்றார் என் கணவர்.

காலை ஏழு மணிக்கெல்லாம் மருத்துவமனையில் இரத்தம் பரிசோதனை செய்யுமிடத்திற்கு சென்று விட்டோம். 

வெள்ளை ஆடையில் தேவதைகளாக செவிலியர்கள் பரபரப்பாக பணி புரிந்து 
கொண்டிருந்தனர். 

சார் உள்ளே வாங்க என்ற குரல் கேட்டு என் கணவர் உள்ளே அழைத்து சென்றார். 

யாருக்கு டெஸ்ட் பண்ண வேண்டும் ?
குனிந்து இரத்தம் சேகரிக்கும் புட்டிகளை
எடுத்துக் கொண்டிருந்த பெண் கேட்டபடி நிமிர்ந்தாள். 

முகிலா !!! 

மிஸ் நீங்களா ?
விரிந்த விழிகளில் ஆச்சரியம் !
உதடுகளில் உறைந்த சிரிப்பு.

அவளால் எப்படி என்னைப் பார்த்து சிரிக்க முடிகிறது? 

அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தேன். 

அழகிய இளம் பெண்ணாக இருந்தாள்.
சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டே
என்னிடம் அன்பாகச் பேசினாள். 

பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆனது? 
சந்தோஷமாக இருக்கிறது உங்களைப் பார்த்தது. உடம்பு சரியில்லையா மிஸ்? 

இந்த வினாவில் உண்மையாகவே பரிவு இருந்தது 

தலையாட்டினேன். சாப்பிட்டு
இரண்டு மணிநேரம் கழித்து மறுபடியும் டெஸ்ட். 

வெய்ட் பண்ணுங்க மிஸ்
ரிசல்ட் தந்து விடுகிறேன். 

ரிசல்ட் வாங்க சென்றேன். 

மிஸ் டயபெடிஸ் கொஞ்சம் அதிகமாயிருக்கு.கொலஸ்ட்ரால் கூட இருக்கு.
என்னாச்சு மிஸ்?
உடம்பை பார்த்துக்கக் கூடாதா?
உண்மையயாகவே அன்பான குரலில் கரிசனையுடன் கேட்டாள். 

டாக்டரைப் பாருங்கள் மிஸ்.சர்க்கரை சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்று அன்புடன் சொன்ன அவள் முன் ஒரு தோல்வியுற்ற மாணவியைப் போல் நின்றேன்.


பக்கத்திலிருந்த சக ஊழியரிடம்
எங்க கணக்கு டீச்சர் என்று பெருமையாக
சொல்லிக் கொண்டிருந்தாள். 

கற்றுத் தர மறுத்த கணக்கு பாடம் என்னை கேலி செய்து சிரித்தது. 

இந்த நிலைக்கு உயர அவளுள் ஒளிந்திருந்த அவள் திறமை என் கண்ணிற்கு எப்படி அன்று படாமல் போனது?
இவள் எதற்கும் உதவாதவள் என்ற எண்ணம் எப்படி எனக்குள் ? 

தோல்வியின் உச்சகட்டத்தில் உறுத்தலுடன் நான். 

சாக்பீஸ் துகள்கள் என் கண்களில் அப்பி இருந்தது போலும் ! 

எங்கோ படித்தது என் நினைவில் வந்தது. 

படிக்கவில்லை என
அவளை அடித்துத்
துன்புறுத்தியது
குறை அறிந்து
கற்பிக்கத் தெரியாத
என் ஆசிரிய ஆணவம் ! 

மனசெல்லாம் வலித்தது....குற்ற உணர்வு ! 

விரல்களில் அப்பியிருந்த சுண்ணத் துகள்கள் நகைத்தன. 

அஜந்தா தேவி

JOIN KALVICHUDAR CHANNEL