இன்னைக்கு உன்னை பெண் பார்க்க, பையனோடு, அவன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வரப்போறாங்க. ஒரே பையன். எந்த கஷ்டமும் தெரியாமல் வளர்த்து படிக்க வச்சுருக்காங்க. பையன் நல்ல வேலையில் இருக்கான். காப்பி மட்டும் சாப்பிடுவதாக முன் கூட்டியே சொல்லிட்டாங்க. நம்முடைய உபசரிப்பில் அவங்களை கவர்ந்து, சம்மதம் தெரிவிக்க வச்சுடணும்” - மகள் வனஜாவுக்கு ஜலஜா அட்வைஸ் செய்தாள்.
தேறிய தரமான காப்பிக்கொட்டை யாக தேர்வு செய்து, வீட்டிலேயே வறுத்து, அரைத்து, தேவையான அளவு சிக்கரி கலந்த தூளில், முற்றிலும் பொங்காத நீரை சரியான அள வில் ஃபில்டரில் ஊற்றி வடித்த டிகாக்ஷனில், ஏடு நீக்கப்பட்ட அடர்த்தியான பாலையும், சர்க்கரையையும் தேவையான அளவு கலந்து தயாரிக்கப்பட்ட சூடான காப்பியை, எவர்சில்வர் டபரா, டம்ளர்களில் ஊற்றினாள் ஜலஜா.
“முகத்தை சந்தோஷமா வச்சுக்கிட்டு, எல்லோருக்கும் காப்பி கொண்டு வந்து கொடு” என்று சொல்லிவிட்டு சமையல் அறையிலிருந்து வெளியேறினாள் ஜலஜா.
“காபி அமிர்தமா இருந்துச்சு” என்று மாப்பிள்ளை முதலில் எழுந்து நின்று பாராட்டியதை தொடர்ந்து மற்றவர்களும் பாராட்டினர்.
பிள்ளை வீட்டார் வெளியே சென்ற வுடன், சமையல் அறைக்கு சென்ற ஜலஜா திடுக்கிட்டு, “ஒரு கப் காபி மீந்திருக்கே... யாருக்கு கொடுக் கலை?” என்று மகளிடம் கேட்டாள்.
“மாப்பிள்ளைக்குதான்...!” என்ற சஸ்பென்ஸோடு தொடர்ந்தாள் வனஜா.
“ஒரு நல்ல கணவனுக்கு, மனைவி கையால் கொடுக்கும் எதுவும் அமிர்தமா இனிக்கணும். கஷ்டத்தையே பார்க்காதவருக்கு, காப்பிக்கு பதிலாக பழைய சாத தண்ணீரில் கொஞ்சம் உப்பும், மோரும் கலந்து கொடுத்தேன். அதைத்தான் அவர் பாராட்டினார். மேற்கொண்டு, நீங்க அவர்களிடம் பேசலாம்” என்று சொல்லி, வெட்கத்தில் தலைகுனிந்த பெண்ணை கட்டி அணைத்து, உச்சி முகர்ந்தாள் ஜலஜா.