”தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆட்சியில் அமர்ந்து 20 மாதங்களாகியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக ஆறு முறை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. பட்ஜெட் கூட்டத்தின் போது சென்னை கோட்டையில் முற்றுகை, மார்ச் 28 ல் ஸ்டிரைக் நடத்தப்படும்,” என, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊழியர்கள் சந்திப்பு, ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தியுள்ளோம். தி.மு.க., கட்சி அரசு அமைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும். சரண்டர், அகவிலைப்படி நிலுவை வழங்கப்படும் என்றனர். ஆனால் ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றவில்லை.
37 ஆண்டுகளாக பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், மருத்துவ தேர்வு வாரியம் தேர்வு செய்த நர்ஸ்கள் என 3.5 லட்சம் ஊழியர்களின் கொத்தடிமை முறையை ஒழித்து, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியான 6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 ல் ஒரு நாள் ஸ்டிரைக், கோட்டை முற்றுகை போன்ற போராட்டங்கள் நடக்கவுள்ளது, என்றார்.