"இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில இறங்கி இடப்பக்கமாப் போற சர்ச் ரோட்டில கொஞ்ச தூரம் நடந்தா வலது பக்கமா ஒரு டீக்கடை இருக்கும். அது தான் வாத்தியார் டீக்கடை. நீ அங்க வந்தாப் போதும். அங்கேயிருந்து நான் உன்னக் கூப்பிட்டுப் போறேன்" சொன்ன தன் நண்பன் ஆன்டனியிடம் ஆச்சரியம் விலகாமல் கேட்டான் அபிஷேக்.
"என்னப்பா இப்பவும் உங்க ஊர் எம். ஜி.ஆர் காலத்தில தான் இருக்கா? அது என்ன வாத்தியார் டீக்கடை? தமிழ் நாட்டு அரசியலிலயும் சினிமாலயும் எத்தனையோ மாற்றங்கள் வந்தாச்சு. இன்னமும் நீங்க மாறாம அப்படியே தான் இருக்கீங்களா?"
தன் நண்பனின் நக்கலின் பொருளுணர்ந்த ஆன்டனி சொன்னான்
"இந்த வாத்தியார் எம் ஜி ஆர் இல்லடா. உண்மையிலேயே வாத்தியார். ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். நீ இங்க வரும்போது அவர உனக்கு அறிமுகப் படுத்தறேன்."
"Okடா. நானும் ஏதோ சுஜாதாவோட 'சினிமாவுக்குப் போன சித்தாளு' நாவலில வர்ற வாத்தியார்னு நினைச்சேன். சரி நாளைக்கு சந்திப்போம். பை."
"பை".
ஒரு நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்காகச் செங்கல்பட்டு வந்த அபிஷேக் தன் நண்பன் தங்கியிருக்கும் அறைக்கு வந்து, ஒரு நாள் எங்காவது நண்பனுடன் சுற்றிவிட்டு நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்ற திட்டத்தோடு ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே வந்து விட்டான். ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் ஆன்டனிக்கு ஓய்வு.
குளித்து விட்டு டீ குடிக்கச் சென்றார்கள் இருவரும். *வாத்தியார் டீக்கடை* என்ற பெயர்ப்பலகை அவர்களை வரவேற்றது. இரண்டு டீ சொல்லி விட்டு அமர்ந்தார்கள். மற்ற கடைகளிலிருந்து மாறுபட்டுத் தெரிந்தது அந்தக் கடை. இந்து தமிழ் திசை, தினமலர், தினமணி பத்திரிகைகளோடு, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகையும், ஆனந்த விகடன், குமுதம் போன்ற வார இதழ்களும் ஒரு வாசகசாலையின் பார்வையை அளித்துக் கொண்டிருந்தது. இரண்டு பேர் டீயைக் குடித்து விட்டுப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்கள்.
டீயைக் கொண்டு வந்து வைத்தவாறே கேட்டார். "தம்பி புதுசா வந்திருக்கிறாரா?"
"ஆமா சார் ஒரு இன்டர்வியூவுக்காக வந்திருக்கிறான்."
டீயைச் சுவைத்தவாறே மெல்லப் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் அபிஷேக்.
"என்ன சார் வாத்தியார் டீக்கடை? பெயரே வித்தியாசமா இருக்கு."
"அது ஒண்ணுமில்ல தம்பி, கொஞ்ச வருஷம் ஒரு அரசுப் பள்ளியில ஆசிரியரா வேல பார்த்தேன். டீக்கடை திறந்தப்போ தெரிஞ்சவங்க எல்லாம் வாத்தியார் டீக்கடைன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. பெயர் நல்லா இருக்கேன்னு நானும் அப்புறம் அந்தப் பெயரையே கடைப் பெயரா வச்சிட்டேன்."
"நீங்க ஓய்வு பெற்ற ஆசிரியர்னு ஆன்டனி சொன்னான். உங்களுக்குத் தான் நல்ல ஓய்வூதியம் வருமே. அப்புறம் எதுக்கு சார் டீக்கடை வச்சு டீ ஆத்துறீங்க? டைம் பாசா?"
"டைம் பாசுக்காகக் கிடையாது தம்பி. வயிற்றுப்பாட்டுக்காகத் தான். நான் பதினைஞ்சு வருஷம் தான் வேலையில இருந்தேன். 2006 ல சேர்ந்ததால பென்ஷன் கிடையாது. பங்களிப்பு பென்ஷன் ஒரு 2000 ரூபா வரும்.ஓய்வு பெற்றப்பக் கிடைச்ச பி.எஃப் பணத்தில பொண்ணோட கல்யாணம் நடத்தினேன். மீதி இருந்த கொஞ்சம் பணம் மனைவிக்கு ஒரு ஆப்பரேஷன் செய்ததில கரைஞ்சு போச்சு. மருமகன் கிட்டக் கையேந்தி வாழத் தன்மானம் இடம் கொடுக்கல. இது திருப்தியா இருக்கு."
"ஆசிரியர்களுக்குத் தான் லட்சக்கணக்கில சம்பளம் கிடைக்கிறதா டீவியில, பத்திரிகைல எல்லாம் சொல்றாங்களே? அதில நீங்க கொஞ்சம் சேமிச்சு வச்சிருந்தா இந்த நிலமை வந்திருக்காதே. ஒரு ஆசிரியரான உங்களுக்கு இது தெரியாதா சார்?"
"அப்படிச் சொல்லிச் சொல்லித் தான் இந்த மக்களும் அரசாங்கமும் ஆசிரியர்கள அவமானப் படுத்துறதா நினைச்சு அவங்கவங்களோட இயலாமைய வெளிப்படுத்துறாங்க. இதே நிலமை இப்படியே போனா நாளைக்கு அரசுப் பள்ளிகளே இல்லாமப் போயிடும்கிறத யாரும் நினைச்சுப் பார்க்க மாட்டேங்கிறாங்க."
"வேலையில சேர்ந்த உடனே யாரும் லட்ச ரூபாவ அள்ளிக் கொடுக்க மாட்டாங்க. 25 வருஷத்துக்கும் மேல வேலை செய்தவங்க தான் 1 லட்சம் சம்பளம் வாங்குவாங்க. ஒரு பட்டப்படிப்பு மட்டும் படிச்சுக் கிட்டு லட்ச ரூபா சம்பளம் வாங்குறவங்க தனியார் கம்பெனிகளில இல்லையா. எம்.எஸ்.சி, பி.எட், எம்.எட், எம்.ஃபில் னு படிச்சுக்கிட்டு, அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்னு எழுதி அவங்க திறமைய வெளிப்படுத்தி வர்றவங்க வேலையில சேர்கிறப்ப வாங்கின ஊதியம் தான் கடைசி வரைக்கும் வாங்கணும்னு நினைக்கிறாங்களா? என்ன கொடுமையப்பா இது?"
"அரசு பண்ற செலவில அதிகமும் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாத் தான் போகுதுன்னும் சொல்றாங்களே?"
"அரசோட செலவப் பத்திப் பேசுறவங்க யாராவது வரவப் பத்திப் பேசுறாங்களா? அரசுக்கு வரக்கூடிய வரி வருவாயில எத்தன சதவீதம் அரசு ஊழியர்கள் கட்டுறதுன்னு சொல்றதுண்டா? வருமான வரி, தொழில் வரி, சொத்து வரி இப்படி எதுவும் பாக்கி வக்காமக் கட்டுறவங்க அரசு ஊழியர்கள் தான். கொடுக்குறா மாதிரி கொடுத்து எடுக்குறா மாதிரி எடுக்கிறதுன்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? அரசு ஊழியர்களுக்கு அது ரொம்பப் பொருந்தும்."
"நீங்க உங்கக் கண்ணோட்டத்தில பேசுறீங்க. அது சரியாவும் இருக்கலாம். ஆனா ஏன் சார் டீக்கடை வைக்கலாம்கிற முடிவுக்கு வந்தீங்க. டியூஷன் எடுத்தாக் கூடக் காசு கிடைக்குமே."
"கிடைக்கும் தான். படிக்கணும்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனா எல்லாராலையும் ஃபீஸ் தர முடியுமா? மிரட்டி வாங்குறதுக்கு நான் கல்வி வியாபாரியும் இல்லையே தம்பி."
"இந்த டீக்கடைக்கான என்னோட பயிற்சிக்கான காரணமும் இந்த சமூகம் தான்னு சொல்லுவேன். சொல்லவா? கேட்கிறீங்களா தம்பி?"
"சொல்லுங்க சார் கேட்கிறேன்"
40, 45 பிள்ளைங்கள ஒரு வகுப்பில வச்சுக்கிட்டு கத்திக் கத்தி தொண்ட வரண்டு போயிடும். பெருக்கக் கூட ஆளில்லாத அரசுப் பள்ளிகளில டீ கொடுக்கவா ஆள் இருப்பாங்க. ஒரு டீ குடிக்கலாம்னு கடைக்குப் போனா 'வாத்தியானுங்க வகுப்பக் கட்டடிச்சுச் சுத்துறாங்க பாருன்னு' சொல்வாங்க நம்ம மக்கள். அதுக்குப் பயந்தே இடைவேளையில ஆசிரியர் அறையிலேயே டீ போட்டுக் குடிக்க ஆரம்பிச்சோம். அந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் தம்பி டீக்கடை போடுற தைரியத்தக் கொடுத்தது."
"ஆனா ஒண்ணு. தனியார் பள்ளிகளில கொடுக்கிற சம்பளத்த விடவும், ஏன், இன்னைக்கு அரசாங்கம் தற்காலிக ஆசிரியர்கள்னுக் கொடுக்கிற சம்பளத்த விடவும் இங்க சம்பாதிக்க முடியுது. என்ன.. வைட் காலர் ஜாப் கிடையாது. அவ்வளவு தான். ஆசிரியர்கள இன்னைக்கு யார் மதிக்கிறாங்க. அத நினைக்கிறப்ப இதில பெரிய வித்தியாசம் எதுவும் தெரியல."
ஓய்வூதியம் இல்லாத ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரின் குமுறலை நேரடியாகக் கேட்டபோது இனியென்ன பேசுவது என்றுத் தெரியாமல் அமர்ந்து விட்டான் அபிஷேக்.
"இன்னொரு விஷயம் தெரியுமா தம்பி. இப்போ எந்த டீச்சரும் தன்னோட பசங்க டீச்சராகணும்னு நினைக்கிறதே இல்ல? மற்றவங்க சொல்றது மாதிரி சும்மா இருந்து எக்கச்சக்கச் சம்பளம் வாங்குறதா இருந்தா அவங்க பசங்களையும் டீச்சராக்கணும்னு நினைக்க மாட்டாங்களா?"
யோசிக்க ஆரம்பித்தார்கள் அபிஷேக்கும் ஆன்டனியும்.
"இவ்வளவு கேள்வி கேட்கிறீங்களே. நீங்க என்ன வேலை தம்பீ பார்க்கிறீங்க?"
"நான் எம் ஏ ஜேனலிசம் படிச்சிட்டு ஒரு பத்திரிகையில வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குப் போக வந்திருக்கேன் சார்."
"சிறப்பான பணி. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை ன்னு சொல்வாங்க. கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும் தம்பி. நேர்மையா வேலை செய்ங்க. வாழ்த்துகள். இன்னொரு உண்மையச் சொல்லவா? பத்து பதினைஞ்சு வருஷம் அரசுக்காக உழைச்ச அரசு ஊழியர்கள் வாங்குறத விட அதிகமா ஓய்வூதியம் பத்திரிகையாளர்கள் வாங்குவாங்க. "
சொல்லி விட்டுக் காலிக் கோப்பையை எடுத்தவாறே தனது அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றார் விஸ்வநாதன் வாத்தியார்.
வேலை கிடைப்பதற்கு முன்னே ஒரு ஆசிரியரைப் பேட்டி கண்ட நிறைவுடன் அபிஷேக்கும் தன் மனக் குமுறலைக் கொட்டக் கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திய திருப்தியோடு வாத்தியாரும் அவரவர் கடமையை நோக்கிச் செயல்பட ஆரம்பித்தார்கள்.
கிராத்தூரான்