'நாடு முழுதும், அடுத்த ஐந்து நாட்களில், 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருவநிலை மாறுபாடு பிரச்னையால் உலகெங்கும் தட்பவெப்ப நிலையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தாண்டு ஏப்., - ஜூன் மாதங்களில் நாட்டின் பெரும் பகுதிகளில் வெப்பநிலை, இயல்பைவிட மிக அதிகமாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் எச்சரித்திருந்தது.
பீஹார், உத்தர பிரதேசம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில், பகல் நேரத்தில் வெப்ப அலை வீசும் என்றும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுதும், அடுத்த ஐந்து நாட்களில், 2 - 4 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும்.
மத்திய பிரதேசம், ஒடிசா, மஹாராஷ்டிராவில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசக் கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.