ஆந்திர மாநிலத்தில் பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு ஆசியர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை தொடர்ந்து மீறுவோரின் போன்கள் பறிக்கப்படலாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- பள்ளிகளின் பாட நேரங்களின்போது ஆசிரியர்கள் செல்போன்களை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த நேரங்களில் தனிப்பட்ட விஷயங்களுக்காக போன்களை ஆசிரியர்கள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதனால் கவன சிதறல்கள் ஏற்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை தடுப்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
பள்ளிக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்ட பின்னர் ஆசிரியர்கள் தங்களது போன்களை சைலன்ட்டில் போட்டு, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்து விட வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர் செல்போனை பயன்படுத்துவது முதலில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை பறித்து தலைமை ஆசிரியரிடம் கொடுக்கப்படும்.
2 ஆவது முறையாக தவறு செய்தால், செல்போன் வட்டார கல்வி அலுவலரிடமும், மீண்டும் தவறு செய்தால் மாவட்ட கல்வி அலுவலரிடமும் போன் ஒப்படைக்கப்பட்டு விடும். மேலும் அவர்கள் செய்த தவறு குறித்து பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்.
இந்த நடவடிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களுடன், இன்ஸ்பெக்டர்களும் ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். இன்ஸ்பெக்டர்கள் ஆய்வு செய்யும்போது செல்போன்கள் பிடிபட்டால் தலைமை ஆசிரியர் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திட்டத்தை எந்த தொய்வும் இல்லாமல் நடத்துவதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். இதன் மூலம் சிறந்த மாணவர்களை எதிர்காலத்தில் உருவாக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் தேதி டெல்லி கல்வி இயக்குனரகம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செல்போன்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.