. -->

Now Online

FLASH NEWS


Sunday 29 September 2024

அக்டோபர் 2-ல் கிராமசபைக் கூட்டம்: தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


காந்தி ஜெயந்தி தினத்தில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறை இயக்குநர் எஸ்.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் எழுதப் படிக்க தெரியாத 5 லட்சத்து 33,100 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க திட்டமிட்டு பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் வாயிலாக 15 வயதுக்கும் மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் செயல்பாடுகள் கடந்த ஜூலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே அனைத்து நகர, கிராம பஞ்சாயத்துகளிலும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் முழு எழுத்தறிவு பெற்ற பஞ்சாயத்து எனும் இலக்கை விரைவில் அடைவோம் என்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் இதுசார்ந்த தொகுப்பு அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது