ஏணியாய் நின்று ஏற்றிவிடும் ஆசிரியர்கள்அனைவருக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
கல்லினைச் செதுக்கிச் சிலையாக வடிப்பதும்
மூங்கிலைச் சுட்டுப் புல்லாங்குழல் செய்வதும்
தகரத்தைக் கூடத் தங்கமாக மாற்றுவதும்
இவர்களுக்கு எப்போதும் கைவந்த கலையே.
மாணவர்களை முன்னாலே அமரவைத்து நிற்பதும்
பிள்ளைகளை உயரவிட்டுத் தானங்கே நிலைப்பதும்
தன்னைவிட உச்சத்தில் சென்றாலும் மகிழ்வதும்
இப்படியே இறுதிவரை வாழ்த்துவதும் இயல்பே.
அதட்டலினால் பயமுறுத்தி அன்பாலே அரவணைத்து
அன்றின்று நாளையென்று அனைத்தையுமே பகிர்ந்தளித்து
இருளகற்றி ஒளியேற்றி இன்பமான வாழ்விற்காய்
அடித்தளம் அமைக்கின்ற அற்புதத்தின் பொறியாளர்.
ஏணியாய் நின்று ஏற்றிவிட்ட ஆசான்கள்
வானமும் வசப்படத் துணைக்கின்ற வல்லுனர்கள்
ஆறறிவு உடையவர்கள் மதிக்கின்ற உத்தமர்கள்
பேரறிவேப் பெருந்தனத்தின் மேலென்று சொல்பவர்கள்.
அறிவளிக்கும் ஆசான்கள் ஆற்றல்மிகு போற்றுனர்கள்
ஆசிரியப் பெருமக்கள் ஆண்டவனின் தூதுவர்கள்
நலமோடும் வளமோடும் வாழியவே வாழியவே
மகிழ்வோடும் நிறைவோடும் வாழியவே வாழியவே.
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
கிராத்தூரான்