*2025 புத்தாண்டானது இன்னும் சில மணிநேரங்களில் உலகம் முழுவதும் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், எந்தெந்த நாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முதல் நாடாகவும், கடைசி நாடாகவும் நுழையும் என்பதை தெரிந்துகொள்ளலாம்..
*2024-ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதி இந்தியாவில் இன்னும் சில மணிநேரங்களில் முடிவடையவிருக்கும் நிலையில், புதிய ஆண்டான 2025-ஐ வரவேற்க உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், நாட்டு மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
*'போனது போகட்டும் புதியவை நல்லவையாக அமையட்டும்’ என்ற எண்ணத்தில் எப்போதும் புத்தாண்டை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது ஆண்டுதோறும் விமர்சையாக நடந்துவருகிறது. புதிய ஆண்டை வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிந்தும், லேசர் வர்ண ஒளிகள், வானவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல்கள் என மக்கள் ஒரே இடத்தில் கூடி கொண்டாடி புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அந்தவகையில் கடற்கரை நகரங்கள் எப்போதும் அதிகப்படியான விழா கோலங்களை கொண்டிருக்கும். அங்கே மக்கள் லட்சக்கணக்கில் கூடி ஒருமித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு புதிய ஆண்டை வரவேற்கிறார்கள்.
*இந்நிலையில் 2025 புத்தாண்டானது இன்னும் சில மணிநேரங்களில் பிறக்கவிருக்கும் நிலையில், எந்தெந்த நாடுகளில் புத்தாண்டு முதலில் பிறந்து கடைசியாக முடிக்கும் என்ற தகவலை இங்கே தெரிந்துகொள்ளலாம்..
*எந்த நாட்டில் முதலில் புத்தாண்டு பிறக்கிறது?
*புத்தாண்டு கொண்டாட்டமானது பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்களின் மாற்றத்தால் ஒவ்வொரு நாடாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் முதலில் புத்தாண்டு பிறக்கும் இடமாக கிரிபட்டி குடியரசில் உள்ள கிரிடிமதி ஆகும். இது கிறிஸ்துமஸ் தீவு எனவும் கூறப்படுகிறது.
*பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவான கிரிடிமதி, புத்தாண்டை காலை 5 மணிக்கும் (EST), இந்திய நேரப்படி டிசம்பர் 31 அன்று பிற்பகல் 3.30 மணிக்கும் முதலில் பார்க்கிறது. அந்த வகையில் தற்போது கிரிடிமதியில் புத்தாண்டு பிறந்துவிட்டது.
*அதற்கு சிறிது நேரத்திற்குப் பிறகு, நியூசிலாந்தின் சதாம் தீவுகள் (Chatham Islands) காலை 5.15 மணிக்கு (EST), இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கும், நியூசிலாந்தின் முக்கிய நகரங்களான ஆக்லாந்து மற்றும் வெலிங்டன் பகுதியில் காலை 6 மணிக்கு (EST), அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கும் கொண்டாட்டத்தை பெறுகின்றன.
*டோங்கா, சமோவா மற்றும் பிஜி..
*பசிபிக் பகுதியில், டோங்கா, சமோவா மற்றும் பிஜி ஆகியவை அடுத்த பகுதிகளாக புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் இணைகின்றன. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் மற்றும் கான்பெர்ரா ஆகியவை வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்கின்றன.
*பின்னர் கொண்டாட்டங்கள் அடிலெய்ட், ப்ரோகன் ஹில் மற்றும் செடுனா போன்ற சிறிய ஆஸ்திரேலிய நகரங்களை கடந்து, குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிரப்படுகின்றன.
*சிட்னி, மெல்போர்ன், கான்பெர்ரா, பிஜி, ரஷ்யா மற்றும் நியூ ஜெனிவாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும், குயின்ஸ்லாந்து, வடக்கு ஆஸ்திரேலியாவில் இரவு 8 மணிக்கும் கொண்டாடப்படுகின்றன.
*ஜப்பான், கொரியா மற்றும் சீனா..
*ஜப்பான், தென் கொரியா மற்றும் வட கொரியா போன்றவை காலை 10 மணிக்கு (EST), இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு கொண்டாட்டங்களை தொடங்கும். அதனைத்தொடர்ந்து மேற்கு ஆஸ்திரேலியா விரைவில் பின்தொடர்கிறது, பெர்த் போன்ற முக்கிய நகரங்கள் IST காலை 10.15 மணிக்கு, இந்திய நேரப்படி இரவு 8.45 மணிக்கு புத்தாண்டை வரவேற்கின்றன.
*அதற்கு அடுத்த சிலமணி நேரங்களில் சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் உள்ள தெருக்கள் வானவேடிக்கைகள், விளக்குகள் மற்றும் புத்தாண்டின் மகிழ்ச்சியான உணர்வால் உயிர்ப்புடன் மிளிர்கின்றன.
*இந்தியா
*இந்திய மக்கள் இரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கின்றனர். அந்த கொண்ட்டாட்டத்துடன் இலங்கையும், அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் வரிசையில் இணைகின்றன.
*புத்தாண்டு கொண்டாட்டத்தில் இணையும் கடைசி நாடு எது?
*அமெரிக்காவின் சமோவா ஜனவரி 1ம் தேதி காலை 11 மணிக்கும், ஹவ்லேண்ட் மற்றும் பேக்கர் தீவுகள் ஜனவரி 1ம் தேதி மாலை 5 மணிக்கு இறுதியாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் இணைகின்றன.