2010 முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்தார். இதனையடுத்து தீர்மானத்தை ஆதரித்து திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். தொடர்ந்து ஒருமனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் சுருக்கம்:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விலக்கு தொடர்பாக முன்மொழியப்பட்ட அரசின் தனித் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:
1. TET தேர்வுக்கு முழுமையான விலக்கு கோருதல்:
23.08.2010-க்கு முன்பாக அப்போதைய நடைமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி அனுபவம் மற்றும் பணிப்பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. சட்டத் திருத்தம் மற்றும் சுற்றறிக்கை:
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, 23.08.2010-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மூலமாக தெளிவான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
3. பணிப்பலன்கள் மற்றும் பதவி உயர்வு பாதுகாப்பு:
நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து பணிப்பலன்களும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.