t> கல்விச்சுடர் என் காலில் விழுவதைக் கட்டாயம் தவிர்ப்பீர்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 January 2017

என் காலில் விழுவதைக் கட்டாயம் தவிர்ப்பீர்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்


"வளைந்து குனிந்து தவழ்ந்து தரையில் உருண்டு கால்நோக்கி கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டுக் கிடக்கிறது. நாம் தலை நிமிர்வோம். தமிழகத்தை நிமிர்த்துவோம்" என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. காரியமாற்ற விரைந்து வா என அவை ஒவ்வொரு நிமிடமும் அழைக்கின்றன.


எனினும், உங்களைப் போன்றவர்களின் உள்ளன்பும், அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பல கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகத்தினர் எனப் பலரின் நேசமும் பேரன்பும் நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்து மழைகளாகப் பொழிகின்றன.
பணிச் சுமைகளுக்கிடையில் உங்களின் அன்புமழையில் நனைவது மனதுக்கு இதமளித்து, சுமையைச் சுகமாக்குகிறது.
நேரில் சந்திக்க வரும் கழகத்தினர் சிலர் ஆர்வம் மிகுதியால், நான் சற்றும் எதிர்பாராத நிலையில் என் காலில் விழுந்து வணங்க முயற்சிப்பது எனக்கு மனதளவில் பெரும் நெருக்கடியை உண்டாக்குகிறது.
கழகத்தினர் இப்படிக் காலில் விழுவதை நான் சிறிதும் விரும்புவதில்லை. விழ முயற்சிக்கும் தோழர்களை உடனடியாகத் தடுத்து தூக்குவதுடன், சில வேளைகளில் பாசத்தோடு கடிந்து கொள்வதும் உண்டு.
எனினும், நாள்தோறும் நேரில் வாழ்த்து தெரிவிக்கும் கழகத்தினரில் சிலர், என் காலில் விழ முயற்சிப்பதும் அதனைப் பார்க்கும் மற்றவர்களும் அதே முறையைக் கடைப்பிடிக்க நினைப்பதும் எனக்கு சற்றும் உடன்பாடில்லாத செயல் என்பதுடன், சுயமரியாதைக் கொள்கை வழியில் தன்மானம் காக்கும் இந்த இயக்கத்திற்கும் எதிர்மறைச் செயலாகவும், உடன்பாடில்லாத செயலாகவும் அமைந்து விடுகிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதால், மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என சமத்துவ நிலைகாண உரிமைப் போராட்டம் நடத்திய திராவிட இயக்கத்தின் அரசியல் அமைப்பாக நம்முடைய கழகம் செயல்பட்டு வருகிறது.
யார் காலிலும் விழ வேண்டிய அடிமை நிலை எந்த மனிதருக்கும் எப்போதும் ஏற்படக் கூடாது என்பதை வலியறுத்தி, வெற்றி கண்ட இயக்கம் இது.
ஒரு மனிதனை சக மனிதன் இழுத்துச் செல்லும் கை ரிக்ஷாக்களை ஒழித்து, சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கி சமூகப் புரட்சியை உருவாக்கியவர் கருணாநிதி.
அவரது மகனாக மட்டுமல்ல, அவர் தலைமையிலான தொண்டனாகவும், உங்களில் ஒருவனாகவும் பழகி வரும் என் காலில் விழுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆணையிடுவதாகக் கருத வேண்டாம். மொழி-இனப் பெருமைகளை மறவாமல், சமூகநீதியை நிலைநாட்டி சுயமரியாதைக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்கான என் கனிவானக் வேண்டுகோள் இது.
நம்மை ஈன்றெடுத்து, வளர்த்து, சமூகத்தில் நமக்கான இடத்தை உருவாக்க பாடுபட்ட வாழும் தெய்வங்களான நம் தாய், தந்தையரை கால் தொட்டு வணங்குவது தமிழர் பண்பாடு. அந்த பண்பாட்டிற்கு ஊறு விளையாமலும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைக்கு குந்தகம் நேராமலும் காக்கும் வகையில் காலில் விழும் பழக்கத்தை தவிர்க்க வேண்டுகிறேன்.
காலந்தோறும் ஏற்படும் சவால்களுக்கு ஏற்ப சுயமரியாதைக் கொள்கையைக் காத்து, சமூக நீதியை நிலைநாட்டி, தமிழினத்தின் மாண்பு காக்க பாடுபட வேண்டிய நெடிய பயணம் நமக்கு இருக்கிறது. அந்தப் பயணத்திற்குத்தான் நமது கால்கள் பயன்படவேண்டும். அந்தப் பயணத்திற்கு ஏற்ற வகையில் வலுவான உடல் இருக்க வேண்டும். முதுகு வளையக் குனிவதோ-காலில் விழுவதோ நம் இலட்சியப் பயணத்தைப் பாழ்படுத்திவிடும்.
மனிதருக்கு மனிதர் தன்மானம் தாழாமல் மரியாதை செலுத்துவதற்காகத் தான் வணக்கம் எனும் அழகுத் தமிழ்ச் சொல்லை நடைமுறைப்படுத்தியது திராவிட இயக்கம். அதன்படி, புன்னகையுடன் நீங்கள் சொல்லும் வணக்கம் தான் மனம் நிறைந்த வாழ்த்துக்கான அடையாளம். கம்பீரமான அந்த வாழ்த்து போதும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வளைந்து குனிந்து தவழ்ந்து தரையில் உருண்டு கால்நோக்கி கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டுக் கிடக்கிறது. நமக்கு அந்தப் பள்ளமான பாதை வேண்டாம். நாம் தலை நிமிர்வோம். தமிழகத்தை நிமிர்த்துவோம்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

JOIN KALVICHUDAR CHANNEL