தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்படுத்தப்படுகின்ற நிலையில், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,723 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பானது 9,91,451 ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை நேற்று வெளியிட்டிருந்தது. இதன் மூலம், நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர முழு ஊரடங்கு அமலாவதையடுத்து திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்றும் திருநெல்வேலியில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அதேபோல ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்றும் சேலத்தில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என்றும், திருச்சி, கிருஷ்ணகிரி,கோவை,திருப்பூர் மாவட்டங்களுக்கு காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக பொது போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபார ரீதியில் பயணம் மேற்கொள்பவர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை 13,113 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.