t> கல்விச்சுடர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் யார்? விண்ணப்பிப்பது எப்போது? எங்கே? எப்படி? செல்வ.ரஞ்சித் குமார் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 July 2023

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் யார்? விண்ணப்பிப்பது எப்போது? எங்கே? எப்படி? செல்வ.ரஞ்சித் குமார்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் யார்? விண்ணப்பிப்பது எப்போது? எங்கே? எப்படி?

செல்வ.ரஞ்சித் குமார்


தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் சமூகநலத் திட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாக 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000/- வழங்குவோம் என்று அறிவித்திருந்தது. தற்போது அவ்வாக்குறுதியில் ஒரு திருத்தத்தை செய்துள்ளது. அதாவது 'தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு' மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதன்படி, 2023 ஜூன் 24 நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள 2,24,13,588 குடும்ப அட்டைதாரர்களுக்கும் விண்ணப்பங்களை வீடுதேடிச் சென்று அளித்து, அதன்பின் விண்ணப்பம் சரிபார்ப்பு, சமர்ப்பிப்பு & கைரேகையுடன் இணையத்தில் பதிவேற்றும் முகாம்களை சுமார் 8 நாள்கள் வரை நடத்தி அதிலிருந்து சுமார் 1 கோடி பயனாளிகளை அரசு நிர்ணயித்துள்ள தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யது மாதம் ரூ.1000/- அவர்களது வங்கி / அஞ்சலகச் சேமிப்புக் கணக்கில் நேரடியாக வரவாக்குவதற்கான பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது.

'தகுதியுள்ள' என்ற சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு பலர் எதிர் விமர்சனங்களை செய்து வருகின்றனர். எதிர்க் கட்சிகள் விமர்சிக்கின்றன என்றால் அதில் மக்கள் நலன் இருக்கிறதோ இல்லையோ அவர்களது கட்சி நலன் உறுதியாக இருக்கும். அதனால் மக்களுக்கு எந்தப்பயனும் விளையப்போவதில்லை. அதே நேரம் பொதுமக்கள் இத்திட்டம் குறித்து முழுமையாக அறிந்து கொண்டால் மட்டுமே மெய்யாகவே இது வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமா / விமர்சனத்திற்குரிய திட்டமா / ஓரளவு பயனையாவது மக்களுக்கு அளிக்கும் திட்டமா என்ற தெளிவு கிடைக்கும். அத்தெளிவை நோக்கியே இப்பதிவு நீள்கிறது.

-- -- -- -- -- -- --

யார் அந்தத் தகுதியான குடும்பத்தலைவி ? :

தனிநபரோ / ஒன்றிற்கும் மேற்பட்டோரோ ஒரு குடும்ப அட்டையில் யாரெல்லாம் உள்ளனரோ அவர்கள் அனைவரும் அடங்கியது ஒரு குடும்பம். அக்குடும்பத்தின் குடும்ப அட்டையில் உள்ள 21 வயது நிரம்பிய ஒரு பெண் / திருநங்கை தனது பெயரில் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவரே இத்திட்டம் குறிப்பிடும் குடும்பத்தலைவி. (ஒரே குடும்பத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்கள் இருப்பின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்குள் ஒருவரை முடிவு செய்துகொள்ளலாம்)

அரசு ஊழியர் / ஓய்வூதியர் / கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் தவிர்த்து ஊராட்சி மன்றத் தலைவர் தொடங்கி மாநகராட்சி மேயர் வரை / MLA / MP / முதியோர் ஓய்வூதியம் பெறுபவர் / விதவை ஓய்வூதியம் பெறுபவர் / அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெறுபவர் / ரூ.2,50,000/-க்குமேல் வருமானம் ஈட்டுவோர் / ரூ.50,00,000/-க்குமேல் Annual Turnover செய்து GST கட்டுவோர் / தொழில்ரீதியாக (T Board) இல்லாது சொந்தப் பயன்பாட்டிற்கு (Own Board) டிராக்டர் அல்லது 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் / 5 ஏக்கருக்குமேல் நன்செய் நிலம் உள்ளோர் / 10 ஏக்கருக்குமேல் புன்செய் நிலம் உள்ளோர் உள்ளிட்ட நபர்களில் எவரையேனும் தமது குடும்ப உறுப்பினராகக் கொண்டிருக்கும் பெண்கள் இவ்வுரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது.

வீட்டின் மின் பயன்பாடு ஆண்டிற்கு 3600 யூனிட்டிற்கும் மேல் இருக்கும் குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் இவ்வுரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது. (ஆண்டிற்கு 3600 யூனிட்டிற்கும் மேல் என்றால், சராசரியாக 2 மாதங்களுக்கு 600 யூனிட்டிற்கு மேல் அதாவது 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் மின்கட்டணம் ரூ.3120/-க்கு மேல்)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட குடும்பங்களின் பெண்களே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான தகுதியுள்ள குடும்பத் தலைவிகள்.

-- -- -- -- -- -- --

எங்கே எப்படி விண்ணப்பிப்பது? :

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒன்று என்ற விகிதத்தில் சார்ந்த நியாயவிலைக் கடை ஊழியரின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நேரில் வழங்கப்படும்.

பின்னர் ஒருநாளிற்கு 60 - 80 நபர்கள் வீதம் விண்ணப்பச் சரிபார்ப்பு முகாமிற்கு வரிசைப்படி அழைக்கப்படுவர். இம்முகாம் நியாயவிலைக் கடைக்கு அருகாமையிலுள்ள பள்ளி / அரசு இடத்தில் 8 நாள்கள் வரை நடைபெறும். அழைக்கப்பட்ட நாளில் செல்ல இயலாதோர் கடைசி 2 நாளில் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

யார் விண்ணப்பிக்கிறாரோ அந்த நபர் மட்டுமே நேரடியாக முகாமிற்குச் சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தினைச் சமர்ப்பிக்க வேண்டும். (முகாமிலும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய உதவி செய்யப்படும்). முகாமில் விண்ணப்பதாரரின் கைரேகை Biometric கருவி மூலம் பதிவேற்றப்படும்.

விண்ணப்பித்தினைச் சமர்ப்பிக்கையில் விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை - அஞ்சலக / வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம் - குடும்ப அட்டை - வீட்டு மின்கட்டண இரசீது உள்ளிட்டவற்றை அசலாக உடன் கொண்டு செல்ல வேண்டும். அசல் ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு உடன் தந்துவிடுவர். Xerox எதுவும் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்பப் பதிவேற்றத்தின் போது ஆதார் விபரங்கள் இத்திட்டத்துடன் இணைக்கப்படும் என்பதால் உங்களது ஆதார் அட்டையில் உள்ள செல்லிடபேசி எண்ணிற்கு One Time Password அனுப்பப்பட வாய்ப்புள்ளது. எனவே, உரிய செல்லிடபேசியையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆதார் அட்டையோ வங்கிக் கணக்கோ இதுவரை இல்லை எனில் விரைந்து அவற்றைப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் அந்த முகாமிலேயே உரிய அலுவலர்களால் வழங்கப்படும். அவற்றை உடன் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில் நியாயவிலைக்கடைக்கு உட்பட்ட குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தன்னார்வளர்கள் நியமிக்கப்பட்டு, விண்ணப்ப விபரங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றுமாறு அரசு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.

(முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றப்பட்டாலும் மேலே கூறப்பட்ட இத்திட்டத்திற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 21 வயது நிரம்பிய பெண் / திருநங்கை அளிக்கும் விண்ணப்பங்களே இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால், நிபந்தனைகளுக்கு உட்படாத குடும்பங்களின் பெண்களும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது என்பது தேவையற்ற காலவிரயமே.)

-- -- -- -- -- -- --

விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டால் என்ன செய்வது? :

முகாம் முழுமையாக நிறைவுற்றபின்னர், தங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விபரம் SMS மூலம் அனுப்பப்படும். அந்த SMS-ல் உள்ள இணையதளத்திற்குச் சென்று என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்ற விபரத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் தவறான காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டிருப்பின் SMS வந்ததில் இருந்து 30 நாள்களுக்குள் e-சேவை மையத்தின் மூலமாக மேல்முறையீடு செய்யலாம்.

மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அன்றிலிருந்து 30 நாள்களுக்குள் வருவாய்க் கோட்டாட்சியரால் சரிபார்க்கப்பட்டு பதிலளிக்கப்படும். விண்ணப்பம் மேல்முறையீடு செய்வதும் சரிபார்ப்பதும் 100% இணையதளம் வழியாக மட்டுமே நடைபெறும்.

-- -- -- -- -- -- --

மேற்கண்ட விபரங்கள் யாவும், 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' தொடர்பான 45 பக்க அரசாணையின் சுருக்கமே.

இச்சுருக்கத்தின் வாயிலாக இத்திட்ட செயலாக்கம் தொடர்பான அடிப்படைத் தெளிவு ஓரளவு ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

இனி, அரசு வகுத்துள்ள நிபந்தனைகள் அனைத்துமே ஏற்புடையதா? அல்லது நிபந்தனைகளில் மாற்றம் / தளர்வு தேவையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்தாக வேண்டும்.

JOIN KALVICHUDAR CHANNEL