நீங்கள் பளபளப்பான, மிகவும் சுத்தமான பற்களை விரும்புபவர் என்றால், இந்த செய்தி உங்களுக்குத் தான்.
பற்களின் அழகு முகத்தின் அழகை பன்மடங்கு அதிகரிக்கிறது. ஏனெனில் ஒரு பிரகாசமான புன்னகை உங்கள் ஆளுமையை மேம்படுத்துகிறது. பற்களை காலையில் பிரஷ் செய்ய வேண்டும், அதாவது பல் துலக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் மிகச் சிலருக்குத்தான் சரியான முறையில் பல் துலக்கத் தெரியும். பல் துலக்கும் போது சிலர் செய்யும் பொதுவான தவறுகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
பற்களை சரியாக பிரஷ் செய்யவில்லை என்றால், பற்கள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை. அதனால், பல் வலி, பல் சொத்தை உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். பற்கள் பளபளப்பாக இருக்க, பற்களுக்கு இடையே சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் பல் மருத்துவ நிபுணர்கள். எனவே சரியாக பிரஷ செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.
1. பற்களுக்கு இடையே உள்ள தூய்மை மிகவும் முக்கியமானது
சாதாரணமாக பல் துலக்கினால் 60 சதவீத பற்களை மட்டுமே சுத்தம் செய்கிறது. அதனால், முன்புறம் மட்டுமே சுத்தம் அடையும். பற்களின் பின்புறம், பற்களுக்கு இடையில் அழுக்கு சிக்கி, பின்னர் பற்சிதைவை ஏற்படுத்தும். அதனால்தான் சுகாதார நிபுணர்கள் பற்களுக்கு இடையில் உள்ள அழுக்குகளை நீக்குவது அவசியம் என்கின்றனர்
2. பிரஷ்ஷை பென்சில் போல் பிடித்துக் கொள்ளுங்கள்
பல் துலக்குவது ஒரு நுட்பமான முறை. பிரஷை நீட்டமாகப் பிடித்து, பற்களைச் சுத்தம் செய்யக் கூடாது. பிரஷ்ஷை பென்சில் போல் பிடித்துக் கொண்டு மேல்தாடைப் பற்களை தேய்க்கும் போது, மேலிருந்து கீழாகவும், கீழ்தாடைப் பற்களை, கீழிருந்து மேல் நோக்கியும் துலக்க வேண்டும். பல் துலக்கும் போது பற்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது. எனவே, சிறந்த வழி பல் துலக்குதலை பென்சில் போல் பிடிப்பது. அதனால், பற்களுக்கு இடையில் சரியாக சுத்தம் ஆகும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
3. குளிர் பானங்கள் மற்றும் ஆல்கஹாலை தவிர்க்க வேண்டும்
பற்களை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க, குளிர் பானங்கள் மற்றும் மதுபானங்களை உட்கொள்ளக் கூடாது. ஏனென்றால் இவை இரண்டும் பற்களின் பாதுகாக்கும் எனாமலை சேதப்படுத்தும் விஷயங்கள். ஆல்கஹாலின் அதிகப்படியான பயன்பாடு பற்களின் எனாமலை பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, பற்களின் அழகைப் பராமரிக்க, இந்த விஷயங்களைத் தவிர்க்கவும்.
4. பல் துலக்கிய பின் நீண்ட நேரம் கொப்புளிக்க கூடாது
பெரும்பாலான மக்கள் துலக்கிய பிறகு நீண்ட நேரம் வாயை கொப்புளிக்கிறார்கள். இது நல்ல பழக்கம் இல்லை. பற்பசையில் புளோரைடு உள்ளது. இது பல் சிதைவைத் தடுக்கிறது. இது ஒரு வகையில் நம் பற்களைப் பாதுகாக்கிறது. அதிக நேரம் கொப்பளித்தால், அதனுடன் ப்ளோரைடும் வெளியேறும்.